கிரிக்கெட்
56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
குஜராத் அதிரடி ஆட்டம்
தொடக்க வீரர் விருத்திமான் சகா 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சுப்மன் கில் 94 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஹர்திக் 25 ரன்களும், டேவிட் மில்லர் 21 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 227 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.
குஜராத் அசத்தல் வெற்றி
லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ் மற்றும் குயிண்டன் டி காக் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். கைல் மேயர்ஸ் 48 ரன்கள் எடுத்து அவுட்டாக, டி காக் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மென்கள் தீபக் ஹூடா (11), ஸ்டோய்னிஸ் (4), நிக்கோலஸ் பூரன் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த காரணத்தால், போட்டி குஜராத் பக்கம் திரும்பியது.
முடிவில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.