கிரிக்கெட்
ராஜஸ்தானுக்கு கைநழுவிப் போன வெற்றி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி!

16வது ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 52வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த விளையாடியது.
ராஜஸ்தான் 214 ரன்கள்
யஷ்யஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 35 ரன்களை குவித்து அவுட் ஆக, அடுத்து வந்த கேப்டன் சாம்சன் உடன் ஜோடி சேர்ந்த பட்லர் அதிரடியாக விளையாடினார். பட்லர் 95 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மறுமுனையில் சாம்சனும் அதிரடியாக விளையாடி அசத்தினார். சாம்சன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது.
ஐதராபாத் த்ரில் வெற்றி
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் அமொல்பிரீத் சிங் 33 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் 55 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஹெண்ட்ரி கிளாசன் 26 ரன் எடுத்து அவுட் ஆக, ராகுல் திரிபாதி 47 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் 6 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 25 ரன்கள் குவித்து கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீச, கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அப்துல் சமத் அடித்த பந்து கேட்ச் ஆக மாறியது. ஆனால், கடைசி பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டதால், 1 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா கடைசிப் பந்தை வீச அப்துல் சமத் சிக்சருக்கு விளாசினார். இதனால், ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி திரில் வெற்றியைப் பெற்றது.