தமிழ்நாடு
ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளை சந்தித்தார்: கொளுத்தி போட்ட சபாநாயகர் அப்பாவு!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளை சந்தித்ததாக தமிழக சட்டசபையின் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

#image_title
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு சில கேள்விகளை எழுப்பினார்.
அதில், அவசரச் சட்டத்திற்கும் ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கும் எந்த வேறுபாடுகளும் கிடையாது. அப்படி இருக்கும் நிலையில் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியது ஏன் என்று தெரியவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற சட்டமன்றத்திற்கே உரிமை இல்லை என்று அவர் எந்த சட்டத்தின் அடிப்படையில் சொன்னார் என்று தான் தெரியவில்லை.
ஆளுநர் எதையும் ஆய்வு செய்யாமல் 2022 அக்டோபர் 1-ஆம் தேதி ஒரு நிலைப்பாடும், 2023 மார்ச் 8-ஆம் தேதி ஒரு நிலைப்பாடும் எடுத்திருப்பது, அவர் இந்த சட்டத்துக்கு எதிராகத்தான் இருந்திருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது. ஆளுநருக்கு என்ன அழுத்தம் வந்தது என்று தெரியவில்லை. ஆன்லைன் சூதாட்ட நிர்வாகத்தினர் ஆளுநரை சந்தித்ததாக செய்திகள் வந்தது. அவர்களுடன் என்ன பேசினார் என்று தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.