வணிகம்
பழைய ஓய்வூதியத் திட்டம் மீட்பு கோரிக்கை: கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு ஊழியர்கள் போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் வகையில், நேற்று (அக்டோபர் 6) தமிழக அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தலைமைச் செயலகத்தில் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரிக்கை விட்டு வருகின்றனர். இதையடுத்து, 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (NPS), மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்து விரிவாக ஆராய ஒரு குழுவை அமைத்தது.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு, மாநில நிதி நிலை மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பரிந்துரை செய்யும் நோக்கில் பல மாதங்களாக ஆய்வுகளை மேற்கொண்டது. குழு, 194 அரசு ஊழியர் சங்கங்களுடன் 9 சுற்று கலந்தாய்வுகள் நடத்தி, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் பல நிதி நிறுவனங்களுடன் ஆலோசனைகளையும் நடத்தியது.
7.36 லட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்த பிறகு, குழு தனது இடைக்கால அறிக்கையை செப்டம்பர் 30ஆம் தேதி அரசிற்கு சமர்ப்பித்தது. எனினும், இந்த அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீட்புக்கு உறுதியான பரிந்துரைகள் இல்லாததால், அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, தமிழக தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அக்டோபர் 6 அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவதாக அறிவித்தது. அதன்படி, நேற்று தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து, ககன்தீப் சிங் குழுவின் இடைக்கால அறிக்கைக்கும், மாநில அரசின் மந்தமான நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளதாவது, “பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என கூறியுள்ளனர்.















