வணிகம்
இனி தங்க நகைக் கடனுக்கு கிடைக்கும் தொகை குறையும்!

சமீப காலமாக தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,000 வரை விலை உயர்வதும், திடீரென மீண்டும் குறைவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இன்று (25/12/2025) ஒரு கிராம் தங்கம் ரூ. 12,820க்கும், ஒரு சவரன் ரூ. 1,02,560க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் தங்கம் வாங்கலாமா, வேண்டாமா என்ற குழப்பம் பொதுமக்களிடையே நிலவுகிறது.
இந்த நிலை தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், தங்கத்தை அடமானமாக வைத்து கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, தங்க நகைக் கடன் வழங்கும் விதிமுறைகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள வங்கிகள் முடிவு செய்துள்ளன. அந்த மாற்றங்கள் என்ன என்பதைக் குறித்து இங்கு விளக்கமாக பார்ப்போம்.
அவசர காலங்களில் எளிதில் கடன் பெறவும், முதலீடாகவும் இந்தியர்கள் தங்கத்தை முக்கியமான சொத்தாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து, அதே வேகத்தில் குறையும் சூழல் ஏற்பட்டால், அது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு பெரிய ஆபத்தாக மாறக்கூடும் என ரிசர்வ் வங்கி (RBI) எச்சரித்துள்ளது.
மேலும், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்க நகைக் கடன் வழங்கும் அளவு கடந்த சில காலங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தங்கம் விலை திடீரென பெரும் அளவில் குறைந்தால், கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நட்டம் ஏற்படும் அபாயம் உள்ளது என RBI கருதுகிறது.
ஒருவர் அதிக விலையில் தங்க நகையை அடமானமாக வைத்து கடன் பெற்ற பின், அடுத்த நாளே தங்கம் விலை 10 முதல் 15 சதவிகிதம் வரை குறைந்தால், அந்த அடமானத்தின் மதிப்பும் குறையும். அத்துடன், கடன் பெற்றவர் கடனை திருப்பிச் செலுத்தத் தவறினால், வங்கிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும் சூழல் உருவாகும்.
இதனை கருத்தில் கொண்டு, தங்கத்தின் மதிப்பில் முன்பு 70% முதல் 72% வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 60% முதல் 65% வரை மட்டுமே கடன் வழங்க வங்கிகள் முடிவு செய்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விளைவாக, தங்க நகைக் கடன் பெற விரும்பும் பொதுமக்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த அளவு கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தங்கம் விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு லாபம் அளித்தாலும், தங்க நகைக் கடன் பெற விரும்புபவர்களுக்கு இது புதிய பிரச்சனையாக மாறியுள்ளது.














