இந்தியா
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் இறந்து விட்டால் குடும்ப பாதுகாப்ப நிதியை சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலரே ஒப்பளித்து வழங்கலாம். – அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசிடமிருந்து ஓய்வுதியத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலங்கள் மூலம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்த ஓய்வூதியர் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட அசாதாராண நிலைமையை சமாளிக்க ரூ.25000 குடும்ப பாதுகாப்பு நிதியாக அரசால் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு அவர்களின் ஓய்வூதியத்திலிருந்து முதலில் ரூ.20 பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது அத்தெகை ரூ.150 ஆக மாதந்தோறும் அவர்களின் ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. குடும்ப பாதுகாப்பு நிதியும் ரூ.25000லிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.50000 மாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த தொகை இறந்த ஓய்வுதியரின் மனைவி அல்லது கணவன் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தகுதி முதுநிலை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான கருத்துருவை சம்பந்தப்பட்ட கருவூல அலுவலர் கருவூலம் மங்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு அனுப்பி ஒப்பளிப்பாணை பெற்று வழங்குவார். இதில் நடைமுறை சிக்கல்கள் மற்றும் காலதாமதங்கள் அதிகம் ஏற்படுவதாகக் கூறி ஓய்வூதியர்கள் இந்த நடைமுறையை மாற்றிட தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். அரசு அவற்றை கவனமுடன் பரிசீலித்து அரசாணை எண்.297 நிதி (ஓய்வூதியம்) துறை நாள்23.12.2025 என அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி இனி இத்தகைய கருத்துரு ஏதும் அனுப்பத் தேவையில்லை. இதற்கான ஒப்பளிப்பாணையினை அந்தந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்களே ஒப்பளித்து விதிமுறைகளை பின்பற்றி உரிய வாரிசுதாரருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியை வழங்க முடியும். இது சென்னையை பொறுத்தவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் மற்றும் மாவட்டங்களில் மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் சார்கருவூல அலுவலர்கள் இந்த ஒப்பளிப்பாணையினை வழங்க முடியும்.
இதன்மூலம் ஓய்வூதியர்கள் இறக்கும்போது குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி விரைவாக கிடைக்க வழி ஏற்பட்டுள்ளதாக ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெருமூச்சு விடுகின்றனர்.



