வணிகம்
PF பணம் பெற புதிய மாற்றம்: ஏப்ரல் 1 முதல் UPI மூலம் நேரடி பணப்பரிமாற்றம்!

வருங்கால வைப்பு நிதி (PF) உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் நோக்கில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, PF பணத்தை UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் பெறும் வசதி விரைவில் அமலுக்கு வர உள்ளது.
பொதுவாக, பணியில் இருக்கும் போது சேமிக்கப்படும் PF தொகையை, ஓய்வு பெற்ற பிறகே முழுமையாக பெற முடியும். இருப்பினும், மருத்துவ செலவுகள், திருமணம், குழந்தைகளின் கல்வி, அவசர தேவைகள் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக, PF தொகையை முன்கூட்டியே எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது உள்ள சிக்கல்
தற்போதைய நடைமுறையில், PF பணத்தை பெற ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பணம் வங்கிக் கணக்கில் வர 3 முதல் 10 நாட்கள் வரை ஆகிறது. சில சமயங்களில் இதைவிட அதிக நாட்களும் ஆகும். இதனால், அவசர காலங்களில் உறுப்பினர்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
புதிய UPI அடிப்படையிலான நடைமுறை
இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில், ஏப்ரல் 1 முதல் UPI மூலம் PF பணத்தை நேரடியாக பெறும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த முறையில், PF உறுப்பினர்கள் தங்களது UPI செயலி மூலம் பணம் பெற கோரிக்கை அளிக்கலாம். கோரிக்கை வந்ததும், EPFO அமைப்பு ஆதார், வங்கி கணக்கு மற்றும் PF விவரங்களை சரிபார்க்கும். அனைத்தும் சரியாக இருந்தால், உடனடியாக பணம் UPI-யுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்படும்.
இதனால், பல நாட்கள் காத்திருக்கும் நிலை முற்றிலும் நீங்கும்.
கூடுதல் வசதிகள்
UPI மூலம் வங்கிக் கணக்கில் வந்த PF தொகையை,
டிஜிட்டல் செலவுகளுக்கு பயன்படுத்தலாம்
ஏடிஎம் மூலம் பணமாக எடுத்துக்கொள்ளலாம்
பாதுகாப்பு காரணங்களுக்காக, UPI PIN பயன்படுத்தி மட்டுமே இந்த பரிமாற்றம் நடைபெறும். இதனால் மோசடி நடைபெறும் வாய்ப்பு குறையும்.
நிர்வாக சுமை குறையும்
தற்போது ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான PF பணம் பெறும் விண்ணப்பங்கள் EPFO அலுவலகங்களுக்கு வருகின்றன. இவை பெரும்பாலும் கைமுறையாக சரிபார்க்கப்படுவதால், நிர்வாக சுமை அதிகரிக்கிறது. புதிய UPI அடிப்படையிலான நேரடி பணப்பரிமாற்ற முறை அமலுக்கு வந்தால், இந்த சுமை பெரிதும் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்டத்தில் விதிகள்
ஆரம்பத்தில், இந்த வசதி BHIM UPI செயலி மூலம் மட்டும் வழங்கப்படும்
முழு PF தொகையை ஒரே முறையில் எடுக்க அனுமதி இருக்காது
எவ்வளவு தொகை வரை UPI மூலம் பெறலாம் என்பது ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி நிர்ணயிக்கப்படும்
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் PhonePe, Google Pay, Paytm போன்ற பிற முக்கிய UPI செயலிகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.















