சினிமா
‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பெற்றோரைத் தவிர்த்தாரா?- ஷோபா விளக்கம்!

‘வாரிசு’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தங்களைத் தவிர்த்தாரா என்பது குறித்து ஷோபா பேசியுள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர்கள் விஜய், ராஷ்மிகா மந்தானா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான படம் ‘வாரிசு’. படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரக்கூடியதாகவே இருந்தது. இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர்-ஷோபா கலந்து கொண்டனர்.
ஆனால், இவர்களை சம்பிரதாயமாக மட்டுமே விஜய் வரவேற்றார் என இணையத்தில் பலரும் கமெண்ட் செய்திருந்தனர். இதுகுறித்து தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷோபா விளக்கி இருக்கிறார். “அந்த மிகப்பெரிய இசை வெளியீட்டு விழாவில் நாங்களும் விருந்தினர்களாகவே கலந்து கொண்டோம். மற்றபடி, விஜய் எங்களை வரவேற்று தனியாக நேரம் செலவிடுவதற்கான இடம் அது இல்லை. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை.
அவ்வளவு ரசிகர்களும் விஜய் மீது செலுத்திய அன்பு நேரில் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. மற்றபடி விஜய் எங்களைத் தவிர்த்தார் என்று சொல்வதெல்லாம் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகிறது” என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.