செய்திகள்
ஜூன் 30க்கு முன் ரேஷன் கார்டு eKYC செய்ய தவறாதீர்கள்! இல்லையெனில் உங்கள் பெயர் நீக்கப்படும்!

ரேஷன் கார்டு eKYC அவசரம் – ஜூன் 30க்குள் பதிவு செய்ய தவறாதீர்கள்!
தமிழகத்தில் உள்ள 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பணியில், முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா (AAY) குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் விரல் ரேகை (Fingerprint) மற்றும் ஆதார் அடிப்படையிலான eKYC நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காலக்கெடு நீட்டிப்பு:
முந்தைய அறிவிப்பில், இந்த பதிவு மார்ச் 31, 2025க்குள் முடிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் பல லட்சம் பயனாளர்கள் கைரேகையை பதிவு செய்யாததால், eKYC செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யவில்லை என்றால் என்னாகும்?
வெளிநாடுகளுக்கு நிரந்தரமாகச் சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் இன்னும் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்படவில்லை என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதைத் தடுக்கும் விதமாக, அனைத்து பயனாளர்களும் தங்கள் விரல் ரேகையுடன் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பதிவு செய்ய வேண்டிய இடம்:
AAY / PHH குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினர்கள் தாங்கள் வசிக்கும் நியாய விலைக் கடை (Ration Shop) அல்லது வெளிமாவட்டம் / வெளிமாநிலம் ஆகிய இடங்களிலுள்ள நியாய விலைக் கடைகளில் POS சாதனம் மூலம் விரல் ரேகை அல்லது கண்கருவிழி (Iris) சோதனை செய்து eKYC செய்யலாம்.
முக்கிய அறிவுறுத்தல்:
👉 ஜூன் 30க்குள் கைரேகை பதிவு செய்யாத பயனாளர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
👉 இது உங்கள் ரேஷன் பயன்கள் நிறுத்தப்பட வாய்ப்பை ஏற்படுத்தும்.
எனவே, இந்த வாய்ப்பை தவறவிடாமல், உடனடியாக உங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று உங்கள் eKYC ஐ முடித்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்டப் பயன்கள் தொடர்ச்சியாக கிடைக்கும் வகையில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.














