தமிழ்நாடு
பெண்களுக்கு சலுகை, ஆண்களுக்கு கட்டணக்கொள்ளை: புலம்பும் பேருந்து பயணிகள்

திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயங்கும் சாதாரண பேருந்துகளில் விதிகளை மீறி இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயங்கும் சாதாரண கட்டண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக 5 ரூபாயும் புறநகர் பேருந்துகளில் 10 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் பெண்களுக்கான சலுகையை ஈடுகட்டும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டண கொள்ளை குறித்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய்க்கு பதிலாக 10 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருவது அம்பலமாகி உள்ளது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் இந்த கூடுதல் கட்டண கொள்ளை நடைபெறுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்
இதுகுறித்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாதாரண கட்டண பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் போல வெள்ளை நிற பலகை, பச்சை நிற பலகை, மஞ்சள் நிற பலகை என்று அதற்கேற்ப பேருந்துகளில் அடையாளப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்து உள்ளனர்
இதனிடையே தமிழகத்தில் புறநகர் பேருந்துகளில் ஆண்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் பல வழித்தடங்களில் இந்த விதி மீறல் நடைபெற்று வருவதாகவும், மகளிர்களுக்கு இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புதிய உத்திகளை கடைபிடித்துள்ளது அரசாணைக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முறைகேடு ஆட்சியாளர்களுக்கு தெரிந்து நடைபெறுகிறதா? அல்லது தெரியாமல் நடைபெறுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர் இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்
தமிழக முதலமைச்சர் உடனே தலையிட்டு ஆண்கள் மீது சுமத்தப்படும் அதிக கட்டணச்சுமையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்