பிற விளையாட்டுகள்
டோக்கியோ ஒலிம்பிக்: இரண்டாவது பதக்கம் வென்றார் அவனி லெகாரா!

டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இவர் 249.5 புள்ளிகள் பெற்று முதல் இடம் பெற்றதை அடுத்து அவருக்கு தங்கம் கிடைத்தது. 19 வயதான அவனி லெகாரா பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதை அடுத்து பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கம் வென்ற அவனி லெகாரா, இன்று வெண்கலம் வென்றுள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இன்று மிக அபாரமாக விளையாடினார். இதனை அடுத்து அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்கள் பெற்று அவனி லெகாரா சாதனை செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய வீராங்கனை ஒருவர் பாரா ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பதும், பதக்கப்பட்டியலில் இந்தியா 36வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.