தமிழ்நாடு
ஆன்லைன் ரம்மி… மேலும் ஒரு உயிர் பலி… கிடப்பில் உள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் எப்போது?

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையை தடுப்பதற்காக ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டமியற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு. ஆனால் அந்த மசோதா நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து மேலும் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
சென்னை, சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ஆன்லைன் ரம்மி மூலம் பணம் சம்பாதிக்கலான் என நினைத்து அதில் விளையாடி வந்துள்ளார். இதனால் ரம்மியில் தனது பணத்தை இழந்ததுமில்லாமல் பல ஆன்லைன் ஆப் மூலமாகவும் கடன் பெற்று அதனையும் ரம்மியில் இழந்துள்ளார். இதுவரை சுமார் 20 லட்சம் வரை இவர் கடனாக பெற்று ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார்.
பணத்தை இழந்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இவர் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள காவல்துறை அவர் தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அதில், ஆன்லைன் ரம்மி காரணமாக பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பதால் தான் இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன எனவும் இதற்கு யார் காரணம் எனவும் அரசியல் கட்சியினர் கூறிவருகின்றனர்.