தமிழ்நாடு
அப்பல்லோவில் ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை வைத்திருந்தனர்: ஸ்டாலின் பரபரப்பு பிரச்சாரம்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை வைத்து நாடகமாடினர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றிபெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வந்தது. அதில், தேர்தலில் வெற்றி பெற்ற போஸின் வேட்பு மனுப் படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை என்று வைக்கப்பட்ட ரேகைகள் போலியானவை. எனவே போஸ் வெற்றிபெற்றது செல்லாது என்று தீர்ப்பு வந்தது.
இதனையடுத்து நேற்று மாலை தருமபுரி பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, டீ குடிச்சாங்க, காபி, இட்லி சாப்டாங்க, காவிரி பிரச்சனைக்காக அழைத்துப் பேசினாங்க என்றெல்லாம் அமைச்சர்கள் சொன்னார்கள்.
ஆனால் இன்று ஜெயலலிதாவின் கைரேகை உண்மையில்லை என்று தீர்ப்பு வந்திருக்கிறது. அப்பல்லோவில் ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர் என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால், விசாரணை நடத்தி ஜெயலலிதா மறைவுக்குக் காரணமானவர்களைச் சிறையில் அடைப்பதுதான் எனது முதல் வேலை என்றார்.















