தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநிலை பாதிக்கப்பட்டவர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மிரட்டல் விடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக உடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி நேற்று அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
சென்னை கிரீன்வேஸ்சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு ஒன்று வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து வந்த மிரட்டல் அழைப்பு புரளி என தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் எனபது குறித்த விசாரணையை மேற்கொண்டதில் கோவிலம்பாக்கம் புறநகர் பகுதியை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை காவல்துறை விசாரணை செய்ததில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் மனநிலை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

















