இந்தியா
தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு .. ஏன்?…

வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டிசம்பர் 16ம் தேதி 91ரூபாய் 01 காசுகளாக சரிவடைந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விட்டதாக பெருமை பேசும் அதே நேரத்தில் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து வரும் அவலநிலையும் தொடரத்தான் செய்கிறது. ஆளும் அரசு தனது நாணயத்தின் மதிப்பை வேண்டுமென்றே குறைக்கும்போது அதன் கரன்சி மதிப்பு குறைவது இயல்பு.
அரசியல் உறுதியற்ற தன்மையிருந்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பற்ற நாடுகளிலிருந்து தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்து பாதுகாப்பான நாடுகளுக்கு கொண்டு செல்வார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் அப்படியொரு நிலை இல்லாத போது அமைதியான சூழலிலேயே இந்த முதலீடு வெளியெற்றம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக கருத இடமளிக்கிறது.
உலக சந்தையில் பெரும்பகுதி டாலர் மூலமே நடைபெறுவதால் டாலருடன் ஒப்பீட்டளவில் வாங்கும் திறன் குறைந்து இந்திய ரூபாயின் மீது செய்திருந்த முதலீடுகளை முதலீட்டாளர்கள் விற்றுவிடுகின்றனர். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் இங்கு செய்துள்ள முதலீடுகளின் மதிப்ப சரிவதைத் தவிர்க்க முதலீட்டாளர்கள் இந்திய ரூபாய் முதலீடுகளில் இருந்து வெளியெறுகின்றனர்.
இப்படி நிதியை வெளியே கொண்டு செல்லும்போது ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால் நிதி உள்ளே வரும்போது ரூபாய் மதிப்பு உயர வெண்டும்தானே?… ஆனால் அப்படி நடப்பதில்லையே என்று சாமானியர்கள் கேட்பது ஆட்சியாளர்கள் காதுகளில் விழாமல் இல்லை. ஆனால் அந்நிய நிதி உள்ளெ வரும்போது ரூபாய் மதிப்பை உயரவிட்டால் ஏற்றமதி பாதிக்கும் என்று கூறி ரிசர்வ் வங்கி டாலரை வாங்கி இருப்பில் வைக்கிறது. சரி இந்த ஆண்டு ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கி செய்தது போல் டாலர்களை விற்று ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவை தடுக்கலாமா என்றாலும் அது பலன் தராது. இதனால் நம்மிடம் இருக்கும் அந்நிய செலாவணி குறையும். டாலரை விற்பதால் நம் சாட்டின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்து அப்போதும் அவர்கள் மேலும் வெளியேறவே வழிவகுக்கும்.
நாடு வளர்ச்சி அடையும்போது உற்பத்தி மதுறையும் சேவை துறையும் செழிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் சேவை துறை மட்டுமே வளர்ந்து உற்பத்தித் துறை பின்னடைவால் இறக்குமதி பொருளாதாரத்துக்கு நாடு உந்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்காக கொண்டுவரப்பட்ட “மேக் இன்இந்தியா“ போன்ற திட்டங்கள் அடைந்த தோல்விகள் காரணமாக வெளிநாட்டில் பொருள்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இந்திய பொருள்களின் மீதான அமெரிக்க வரிவிதிப்பு உயர்ந்தது மற்றும் அமெரிக்கா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகள் இந்திய மாணவர் மற்றம் தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்தி ஊதியத்தை குறைத்தது தொழிலாளர்களை வெளியேற்றியது ஆகியவையும் ரூபாய் மதிப்ப குறைய காரணங்களாக அமைந்து விட்டன.
சுதந்திரத்திற்கு பிந்தைய 43 ஆண்டுகளில் வெறும் 33 சதவீதம் மட்டுமே சரிந்த ரூபாய் மோடி அரசின் தாராளமய காலத்தில் 400 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்தள்ளது.
உலக பொருளாதார மந்த நிலை மத்திய வங்கிகளின் கடன் விகிதம் டாலரில் வர்த்தகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என பல கதைகளை கூறினாலும் அதிக பணவீக்கம் அரசியல் உறுதியற்ற தன்மை உள்நாட்டு பற்றாக்குறை என்ற முக்கிய காரணங்களும் இருப்பதை யாரும் புறந்தள்ளிவிட முடியாது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய விலைவாசி 5-6 சதவீதமாக தொடர்ந்து உயர்வதால் இந்திய ரூபாயின் வாங்கும் திறன் மிக குறைந்து குறிப்பிட்ட பொருளை முன்பு கொடுத்ததைவிட கூடுதல் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி பணவீக்கம் அதிகரிப்பதால் பணத்தின் வாங்கும் சக்தி குறைந்து மதிப்பும் குறைகிறது.
மறைமுக வரிகள் மக்களின் பரிவர்த்தனைகளை வெகுவாக குறைத்து விடுகிறது. அதற்கு வசதியாகத்தான் ஒன்றிய அரசு நேரடி வரிவிதிப்பை அதிகரிப்பதற்கு பதில் ஜி.எஸ்.டி. போன்ற மறைமுக வரியை அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் வாங்கும் திறன் குறைகிறது. கார்ப்பரேட்களுக்கு உரிமைகளை வாரி வழங்கி தொடர்ந்து பல்வேறு விலைகளை ஏற்றியும் வருகிறது. இப்போது ஏற்றுமதியை விட தங்கம் கச்சா எண்ணெய் போன்றவற்றை அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள டாலர்கள் வெளியெ போய் அதன் மதிப்பு கூடுகிறது.
மேலும் ரூபாய் மதிப்ப வீழ்ச்சியால் நாட்டின் இறக்குமதி செலவு அதிகரிக்கவே செய்யும். இதனால் மறைமுகமாக விநியோகச் செலவும் அதிகரிக்கிறது. இது நமது மளிகை பொருட்கள் வரை விலையைப் பாதிக்கிறது.
இந்த நிலைகளிலிருந்து மீள இந்திய அரசும் பொருளாதார வல்லுநர்களும் இணைந்து நிறைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் சாமானியன் கையில வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியலை என்று பாடிககொண்டிருக்க வேண்டியதுதான்.






