இந்தியா
அடுத்தது யார்? கர்நாடக முதல்வராக எடியூரப்பா ஆவதில் சிக்கல்!

கர்நாடகாவில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. ஆனால் தற்போது அடுத்த கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களாக கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் இழுத்தடித்து வந்த குமாரசாமி அரசு ஒருவழியாக நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. அதில் மொத்தம் பதிவாகிய 204 வாக்குகளில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கர்நாடக அரசு கவிழ்ந்தது.
குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அடுத்த அரசு பதவியேற்கும் வரை முதலமைச்சராக தொடரும்படி குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக பாஜக பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் பேசியுள்ளார். எடியூரப்பா தலைவராக இருந்தாலும், அவர் தனக்கான ஆதரவை நிரூபிக்க வேண்டும். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் எடியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

















