சினிமா
விஜய்யின் கடைசி படம் ‘ஜன நாயகன்’: புது ரிலீஸ் தேதி பிப்ரவரி 20? கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!

கோலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய், அரசியல் பயணத்தில் முழு கவனம் செலுத்தி வருவதால், அவரது நடிப்பில் வெளியாகும் “ஜன நாயகன்” திரைப்படமே கடைசி படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விஜய்யின் ‘ஜன நாயகன்’
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
பெண் பாதுகாப்பு மற்றும் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ரிலீஸ் தாமதம் – காரணம் என்ன?
முதலில், 2026 ஜனவரி 9ஆம் தேதி ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சென்சார் சிக்கல்கள் காரணமாக, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்படலாம் என்ற தகவலும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
புது ரிலீஸ் தேதி – பிப்ரவரி 20?
இந்த நிலையில், லண்டனை தலைமையிடமாகக் கொண்ட “சினி வேர்ல்ட்” என்ற வெளிநாட்டு டிக்கெட் விநியோக நிறுவனம், ஜன நாயகன் திரைப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, தளபதி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘தாய்க்கிழவி’ திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
இதுவரை, ஜன நாயகன் படக்குழு சார்பில் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த தகவல் உண்மையாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

















