வணிகம்
யுபிஐ மோசடிகளை தடுக்க ஜூன் 30 முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை: இனி பெறுநரின் அசல் பெயர் மட்டுமே காட்சியாகும்!

இந்தியாவில் யுபிஐ (UPI) பயனாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக தினசரி கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், யுபிஐ மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் ஒரு முக்கிய புதிய பாதுகாப்பு விதிமுறை 2025 ஜூன் 30 முதல் அமலுக்கு வருகிறது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மொபைல் எண்ணும், யுபிஐ ஐடி மற்றும் QR கோட் மூலமும் பணம் அனுப்பும் போது, பெறுநரின் புனைப்பெயர் (Nickname) இனிமேல் காண்பிக்கப்படாது. அதற்குப் பதிலாக, வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட உண்மையான பெயர் மட்டுமே திரையில் தோன்றும்.
முக்கிய அம்சங்கள்:
ஜூன் 30, 2025 முதல், அனைத்து யுபிஐ செயலிகளும் (PhonePe, GPay, Paytm உள்ளிட்டவை) வங்கி கணக்கில் உள்ள பெயரையே காட்சிப்படுத்த வேண்டும்.
Peer to Peer (P2P) மற்றும் Peer to Peer Merchant (P2PM) பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.
பயனாளர்கள் மொபைல் எண், யுபிஐ ஐடி, QR கோட் மூலமாக பணம் அனுப்பலாம், ஆனால் Send செய்யும் முன் காண்பிக்கப்படும் பெயர் மட்டும் அசல் பெயராக இருக்கும்.
மோசடி செய்பவர்கள் புனைப்பெயர்களை பயன்படுத்தி பணம் பெறுவதைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
சைபர் பாதுகாப்பு, பரிவர்த்தனையில் நம்பகத்தன்மை ஆகியவை மேம்படும்.
இந்த புதிய விதிமுறை யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் பல்லாயிரக்கணக்கான பயனாளர்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பகமாகவும் இருக்க உதவும். பயனாளர்கள் Send செய்யும் முன் பெறுநரின் உண்மையான பெயரைக் கண்டறிந்து மோசடிகளைத் தவிர்க்க முடியும். இது UPI பாதுகாப்பில் ஒரு முக்கிய கட்டமாக விளங்கும்.


















