தமிழ்நாடு
அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய டி.ஆர்.பாலு: 48 மணிநேரத்தில் மன்னிப்பு, 100 கோடி ரூபாய் இழப்பீடு!

DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை திமுக எம்பி டிஆர் பாலுவின் சொத்து மதிப்பு குறித்தும் சில தகவல்களை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுகவில் இருந்து தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தவாறு உள்ளன. முன்னதாக ஆர்.எஸ்.பாரதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலமாக அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தற்போது டி.ஆர்.பாலுவும் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் எனவும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மேலும் திமுக எம்பி கனிமொழியும் இந்த விவகாரத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.