சினிமா செய்திகள்
பாடும் நிலா பாலு மறைந்த நாள்: எஸ்பிபி புத்தகம் வெளியீடு!

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்கள் கடந்த ஆண்டு இதே தினத்தில் காலமான நிலையில் அவரது ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிரது. திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் எஸ்பி பாலசுப்பிரமணியன் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கொரோனாவில் இருந்து குணமாகி விட்டாலும் வேறு சில நோய்கள் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்றுடன் எஸ்பி பாலசுப்பிரமணியன் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டதை அடுத்து இன்று எஸ்பிபி யின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று வெளியாகவுள்ளது. எஸ்பிபியின் தீவிர ரசிகரான சுதிர் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியாக உள்ள இந்தப் புத்தகம் நானூறு பக்கம் கொண்டது என்பதும் எஸ்பிபி உடன் பணியாற்றிய கமல், ரஜினி, வைரமுத்து உள்பட பலர் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் குறித்து புத்தக ஆசிரியர் சுதிர் கூறுகையில் ’எஸ்பிபி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடகர், அவருடன் பலமுறை பேசியுள்ளேன், அவரை எனக்கு பத்து வருடங்களுக்கு மேல் தெரியும், ஆனால் ஒருமுறைகூட அவரை நேரில் சந்தித்தது கிடையாது, எங்களுடைய உரையாடல் அனைத்துமே போனில் மட்டும் தான், கடந்த ஆண்டு அவர் உயிரிழந்தார் என்ற தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து அவரை பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என முடிவு செய்து கடந்த ஒரு வருடமாக அவருடைய தகவல்களை திரட்டி இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறேன். இந்த புத்தகத்தை நான் எழுதுவதை கேள்விப்பட்டதும் கமல், ரஜினி, வைரமுத்து உள்பட பலரும் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். எஸ்பிபி அவர்கள் மறைந்த அதே நாளில் இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி இன்று இந்த புத்தகம் வெளியாக உள்ளது. எஸ்பிபி நெருங்கிய நண்பர் ஜீவி முரளி எனக்கு இந்த புத்தகத்தை எழுத பெரிதும் உதவி செய்தார், அவருக்கு எனது நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.









