சினிமா
’பொன்னியின் செல்வன்2’ இசைப்பணிகள் லண்டனில் நடைபெற காரணம் இதுதான்!

‘பொன்னியின் செல்வன்2’ படத்தின் இசைப்பணிகள் லண்டனில் நடைபெறுவதற்கு என்ன காரணம் என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி உள்ளிட்டப் பலரது நடிப்பில் ’பொன்னியின் செல்வன்1’ கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகம் படம் அடுத்த மாதம் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்காக படக்குழு தற்போது தீவிர புரோமோஷன் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, இரண்டாம் பாகத்தில் இருந்து சமீபத்தில் இதன் முதல் பாடலான ‘அகநக’ பாடல் சக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் வெளியாகி ரசிகர்களுக்குப் பிடித்தப் பாடலாக மாறியுள்ளது. தற்போது படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் தீவிரமாக லண்டனில் நடைபெற்று வருகிறது.
லண்டனில் இருக்கக்கூடிய அபெய் ரோடு ஸ்டுடியோஸில் இயக்குநர் மணிரத்னத்துடன் இருக்கும்படியான இந்தப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் ரஹ்மான் பகிர்ந்திருக்கிறார். முதல் பாகத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் இசையும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த இசையைக் கொடுக்க படக்குழு லண்டனில் முகாமிட்டுள்ளது.