செய்திகள்
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்: தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

சென்னை:
தமிழ்நாடு அரசு, பெண்களின் சொந்த நிலம் பெறும் கனவை நிறைவேற்ற நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் முக்கியமாக விவசாய கூலிகள், ஏழை மற்றும் எளிய பெண்களுக்கு நில உரிமை வழங்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது.
சமீபத்தில், இந்த திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி, நன்னிலம் திட்டத்துக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வழியாகவே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
தாட்கோ வெளியிட்ட அறிவிப்பில், CM-ARISE, PM-AJAY, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு தகுதியான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் அனைவரும் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்தை தாண்டக்கூடாது. பெண்கள் அதிகபட்சம் 2.5 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலங்களை வாங்க முடியும். நிலம் வாங்குவதற்காக தமிழ்நாடு அரசு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கும்.
18 முதல் 55 வயது பெண்கள் இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள். வாங்கப்படும் நிலத்தை 20 ஆண்டுகளுக்கு விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. நிலம் பதிவு செய்யும் போது முத்திரைத் தாள் கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும், மின் இணைப்புகள் விரைவாக வழங்கப்படும். ஆழ்துளை கிணறு, பம்புசெட் அமைப்பதற்கும் அரசு மானியம் வழங்குகிறது.
இத்திட்டம் மூலம் பெண்கள் நில உரிமையுடன் வாழ்வாதார முன்னேற்றத்தையும் பெறுவார்கள். தகுதியுடையவர்கள் தங்களின் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் சென்று உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

















