தமிழ்நாடு
பலே திட்டத்தில் டெல்லியில் உதயநிதி… சந்திக்க நேரம் ஒதுக்கிய மோடி!

தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அரசு முறை பயனமாக டெல்லி சென்றுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார்.

#image_title
நேற்று டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதியை, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், இளைஞர் நலத் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.
நேற்று பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின், இரவு தமிழக முன்னாள் ஆளுநரும், தற்போதையை பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். மேலும் இன்றைய தினம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் போன்ற சில மத்திய அமைச்சர்களை சந்தித்து, துறை தொடர்பான திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.
இந்நிலையில் உதயநிதிக்கு இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளின் போது, தமிழகம் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள், நீட் தேர்வு விவகாரம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது போன்ற பல கோரிக்கைகளை வல்லியுறுத்த உள்ளார்.