கிரிக்கெட்
ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் நேற்று கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

#image_title
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியினர் பேட்டிங் செய்ய வந்தனர். தொடர் தோல்விகளால் சோர்வடைந்து இருந்த டெல்லி அணி இந்த போட்டியில் ஆக்ரோஷமான பந்து வீச்சை வெளிப்படுத்தியது. முதல் 10 ஓவர்களில் 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா அணி.
கொல்கத்தா அணியின் ஜேசன் ராய் 43 ரன்களும், ஆண்ட்ரூ ரஸ்ஸல் 38 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி அணியின் இஷாந்த் ஷர்மா, அன்ரிச் நோர்ஜே, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்தார். 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கான 128 ரன்களை எடுத்து முதல் வெற்றியை பெற்றது டெல்லி அணி. சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களுக்கு 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.