வணிகம்
மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது – விரைவில் நாடு கடத்த வாய்ப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,850 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் இருந்த தப்பிச்சென்ற வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கையை அடுத்து பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என சிபிஐ வட்டாரங்கள் இன்று (ஏப்ரல் 14, 2025) உறுதிப்படுத்தியுள்ளன.
சோக்ஸி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் பெல்ஜிய காவல்நிலையத்தில் அடைக்கலத்தில் உள்ளார். அவருக்கு மும்பை நீதிமன்றம் வழங்கிய இரண்டு கைது உத்தரவுகளை அடிப்படையாக கொண்டு கைது செய்யப்பட்டது. இந்த உத்தரவை முறையே மே 23, 2018 மற்றும் ஜூன் 15, 2021 ஆகிய தேதிகளில் வழங்கியிருந்தனர்.
சுகாதாரக் காரணங்களையும், பிற சட்டக் காரணங்களையும் முன்வைத்து உடனடி ஜாமீன் மற்றும் விடுவிப்பு கோரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சோக்ஸி மற்றும் அவரது அண்ணனின் மகன் நிரவ் மோடி ஆகியோர், இந்தியாவின் CBI மற்றும் அமலாக்கத் துறை (ED) அதிகாரிகளால் தேடப்பட்டு வருகின்றனர். அவர்கள் 2018ம் ஆண்டு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிரேடி ஹவுஸ் கிளையில் உள்ள அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து, பன்னாட்டு நாணயங்களில் கடன் உறுதிமொழிகளை (LoUs, FLCs) தவறாக பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த மோசடிக்கு பிறகு இருவரும் ஜனவரி 2018ல் இந்தியாவிலிருந்து தப்பி சென்றனர். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த PNB மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
சமீபத்தில், பெல்ஜிய வெளியுறவுத் துறை மெஹுல் சோக்ஸி அந்த நாட்டில் இருப்பதை உறுதிசெய்தது. அவர் தனது மனைவி பிரீதி சோக்ஸி உடன் Antwerp நகரத்தில் வசித்து வந்ததாகவும், பெல்ஜிய குடியுரிமை அடிப்படையில் அங்கு நிரந்தர குடியிருப்பு அட்டையை பெற்றிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021ல், சோக்ஸி அண்டிகுவாவில் இருந்து காணாமல் போயிருந்தார், பின்னர் டொமினிகா எனும் மற்றொரு கரிபியன் தீவுக்குத் தப்பிச் சென்றிருந்தது கண்டறியப்பட்டது.
2024 டிசம்பரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியபோது, சோக்ஸி உள்ளிட்ட மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.22,280 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு, கடனை திரும்ப செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தார்.













