வணிகம்
ஜூலை 1 முதல், உங்கள் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் 6 முக்கிய மாற்றங்கள்!

ஜூலை 1 முதல், உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கக்கூடிய முக்கியமான நிதி மற்றும் கொள்கை மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. ஆதார், பான், ரயில்வே, GST, HDFC வங்கி, வருமானவரி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு தகவலையும் தவற விடாதீங்க!
பான் கார்டு

ஜூலை 1 முதல், பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களது ஆதார் கார்டினை 2025 டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இணைக்கத் தவறினால், பான் கார்டு செயலிழக்கும் அபாயம் உள்ளது.
ஐஆர்சிடிசி தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங்

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் புக்கிங் தளத்தில், ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட் எடுக்க, கணக்கில் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது.
மேலும், ஜூலை 15 முதல், ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையில் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் கட்டணம்

ஜூலை 1 முதல், ரயில் டிக்கெட் கட்டணம் கிலோமீட்டருக்கு 1 பைசா உயரக்கூடும். இது 2020-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நடக்கும் கட்டண உயர்வாகும்.
ஜிஎஸ்டி

ஜூலை முதல், GSTR-3B படிவத்தில் முன்பே நிரப்பப்பட்ட தகவல்களை திருத்த முடியாது. மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் தாமதமான GST ரிட்டர்ன்கள் தாக்கல் செய்ய முடியாது.
ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு

ஜூலை 1 முதல், ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் வாலெட் ஏற்றம் (wallet load), ₹50,000-ஐ மீறும் வாடகை, எரிபொருள், ஆன்லைன் கேமிங் ஆகிய சேவைகளுக்காக 1% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மாதத்திற்கு அதிகபட்சம் ₹4,999 வரை கட்டணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல்

2024-2025 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு ஜூலை 31-இலிருந்து செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தனிநபர்களுக்குப் பெரிதும் உதவக்கூடிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.






















