தமிழ்நாடு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் 42% நிறைவு; 2026 அக்டோபரில் முழுமையாக செயல்பட இலக்கு

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) கட்டுமானப் பணிகள், நவம்பர் 30 நிலவரப்படி 42 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை அருகே தொப்பூர் பகுதியில் 220 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் முதன்முறையாக பிப்ரவரி 2015 இல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2019 ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதிகாரப்பூர்வமாக கட்டுமானப் பணிகள் மே 22, 2024 அன்று தொடங்கப்பட்டு, தற்போது இரு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்ட பணிகள்
முதல் கட்டத்தில்,
கல்வி வளாகம் (Academic Block)
வெளிநோயாளர் சேவை (OPD)
ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான விடுதிகள்
அவசியமான சேவை கட்டிடங்கள்
ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இரவு பகல் பாராமல் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு, 2026 பொங்கல் காலத்தில் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்ற நம்பிக்கையையும் எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
2026 அக்டோபர் இலக்கு
தற்போது, முழு மருத்துவமனை திட்டத்தையும் 2026 அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த கட்டுமானம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த கட்டமைப்பு தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
கல்வி & OPD சேவை தொடக்கம்
வரவுள்ள கல்வியாண்டிலேயே மருத்துவப் பாடப்பிரிவுகள் மற்றும் வெளிநோயாளர் சேவைகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, தொப்பூர் வளாகம் முழுமையாக செயல்படத் தொடங்கும் வரை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.










