இந்தியா
அடுத்தது கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார்: சொல்லி அடிக்கும் பாஜக!

டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது செய்தது. இந்நிலையில் அடுத்ததாக கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என பாஜக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
நேற்றைய தினம் சிபிஐ விசாரணைக்கு அழைத்த நிலையில், விசாரணைக்கு அலுவலகத்துக்கு செல்லும் முன்னரே தான் இன்று கைது செய்யப்படலாம் என கூறிவிட்டு தான் சென்றார் மணீஷ் சிசோடியா. இவரது இந்த கைது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த கைது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாஜக நிர்வாகி கபில் மிஸ்ரா, கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று நான் ஆரம்பம் முதலே கூறிவந்தேன். இப்போது சத்யேந்தர் ஜெயினும், மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அடுத்தது கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என பதிவிட்டுள்ளார் அவர். ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவது டெல்லி அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.