இந்தியா
ஜெர்மனி அதிபர் வருகை எதிரொலி: பெங்களூர் போக்குவரத்தில் திடீர் மாற்றம்..!

இந்தியாவிலேயே மிக அதிகமாக போக்குவரத்து நெருக்கடி உள்ள நகரம் பெங்களூரு என்று கூறப்படும் நிலையில் ஜெர்மனி அதிபர் வருகையை ஒட்டி பெங்களூர் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூர் நகரம் நெருக்கடியான நகரம் என்றும் இந்தியாவின் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று என்றும் கூறப்பட்டு வருகிறது. ஒரு சில கிலோமீட்டர் பயணம் செய்யவே மணிக்கணக்கில் ஆகும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர் என்பதும் மெட்ரோவில் செல்லும் பயணிகள் மட்டுமே நிம்மதியாக பயணம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெங்களூருக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அவர்கள் வருகை தர உள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் நகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசாரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மாற்று வழிகளில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும் என்றும் குறிப்பாக ஒருசில இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர் .
கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் 12 ஆண்டுகளுக்கு அடுத்து ஜெர்மனி அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அதுவும் அவர் பெங்களூருக்கு வருகை தருவதை அடுத்து பெங்களூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில சாலைகளின் இருபுறமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வகையான வாகனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
பல்லாரி சாலை, மேக்ரி வட்டம், காவேரி தியேட்டர் சந்திப்பு, ரமண மகரிஷி சாலை, காலாட்படை சாலை மற்றும் கப்பன் சாலை ஆகியவை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டிய சில சாலைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எச்ஏஎல் பழைய விமான நிலைய சாலை, ஒயிட்ஃபீல்ட் மெயின் ரோடு, எச்ஏஎல் முதல் கே ஆர் புரம் வரையிலான ரிங் ரோடு, தொட்டனேகுண்டி சாலை, கிராஃபைட் இந்தியா சாலை, குயின்ஸ் சாலை, ராஜ் பவன் சாலை, எம்ஜி சாலை, இந்திராநகர் 100 சாலை மற்றும் பழைய மெட்ராஸ் சாலை ஆகிய சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், மாற்று வழிகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.