கிரிக்கெட்
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பின்தங்கிய இந்தியா: முதலிடத்தில் ஆஸ்திரேலியா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா தனது 113 புள்ளிகளை 118 ஆக உயர்த்தி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை
பாகிஸ்தான் அணி 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய அணி 115 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி 3 வது இடத்தில் தான் இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில், அந்த அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடியது. டி20 தொடரில், இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளைப் பெற்றது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லாமல் போனது. இதன் காரணமாக, டி20 தொடர் சமனில் முடிந்தது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை பொறுத்த வரையில், நியூசிலாந்தை பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
நியூசிலாந்து அணி 104 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், இங்கிலாந்து அணி 101 புள்ளிகளுடன் 5 வது இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.