உலகம்
தேனீக்கள் அழிந்து விட்டால் 4 ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்… அப்படியா???

இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா?.. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தான். இந்த உலகம் பூச்சிகளால் சூழப்பட்டது. பூச்சிகளின் பட்டியலில் தேனீ முக்கியமானது.
செடி. கொடி மரம் என தாவர இனங்கள் இந்த உலகத்திற்கு முக்கியமானவை. அவை மண் அரிப்பைத் தடுக்கின்றன. ஓசோன் படலத்தைப் பாதுகாக்கின்றன. வனவிலங்குகளுக்கு வாழ்விடமாகவும் உணவாகவும் அமைகின்றன. நமக்கு காற்றையும் மழையையும் மரங்கள் நிறைந்த காடுகள் தருகின்றன. மருத்துவ குணம் கொண்ட தாவரங்களும் உண்டு. இத்தகைய தாவரங்கள் இனப்பெருக்கம் செய்திட மகரந்தச் சேர்க்கையை நம்பியுள்ளன. மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில் தேனீக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையின்படி மனிதர்களின் உணவுப்பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் போன்ற பூச்சிகளையே நம்பி உள்ளது. மகரந்தச் சேர்க்கையை சார்ந்து உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவின் மதிப்பு 577 பில்லியன் டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
தேனீக்கள் இல்லையென்றால் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் உற்பத்திக்கான பயிர்கள் மட்டுமல்லாது பாதாம், வால்நட்டுகள், காபி கோக்கோ பீன்கள், போன்ற பல பயிர்களின் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படும்.
காலநிலை மாற்றம், காடுகளின் அழிப்பு, குறிப்பிட்ட இரசாயண உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, காற்று மாசு போன்ற காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தேனீக்கள் பட்டாம்பூச்சிகள் வௌவால்கள் போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்கள் மனித நடவடிக்கைகளால் அதிக அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறுகிறது.
பூச்சிக்கொல்லிகளின் செயல்பாட்டினால் உணவு தேடும் திறன் குறைதல் இனப்பெருக்க வெற்றி குறைதல் மற்றும் நோய்க்கிருமி தாக்குதல் ஆகியவற்றைத் தேனீக்கள் எதிர்கொள்கின்றன. காலநிலை மாற்றமானது பூக்கும் நேரத்தைப் பாதிக்கலாம். இது தேனீக்களுக்கு உணவு கிடைத்தலைக் குறைக்கும். புவி வெப்பமயமாதலால் தேனீக்களின் வளர்சிதை மாற்றமும் பாதிக்கும். இதனால் உணவைச் சேகரிப்பதற்கு வழக்கத்தை விட அதிக ஆற்றலை தேனீக்கள் செலவிட வேண்டியிருக்கும் என்கிறார் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் பெங்களுருவில் உள்ள அசோகா அறக்கட்டளையின் மூத்த நிபுணர் முனைவர் பிரியதர்ஷன்.

நமது சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைத் தேனீக்களின் நடத்தைகளை வைத்து கண்காணிக்க முடியும். தேனீக்களை கண்காணிப்பதின் மூலம் விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாப்பதற்கான நுண்ணறிவுகளைப் பெறமுடியும்.
இவ்வளவு பேசுகிறோமே தேனீக்கள் இல்லாவிட்டால் மகரந்தச் சேர்க்கை சாத்தியமில்லையா எனக் கேட்கலாம். செயற்கை மகரந்தச் சேர்ககைக்கான நடவடிக்கைகளுக்கு ஆகக்கூடிய மிதமிஞ்சிய செலவைப் பார்த்தால் அவை போதுமான பலனைத் தராது.
தேனீக்களின் எண்ணிக்கை குறைவதால் பயிர் விளைச்சல் குறையும். உணவுத் தட்டுப்பாடு எற்படும். சத்தான உணவுகளின் அணுகல் குறையும். விவசாயிகளின் அன்றாட வேலை மற்றும் வாழ்வாதாரத்தையும் கணிசமாகப் பாதிக்கும். இந்த விளைவுகள் இப்போதே தொடங்கி விட்டன.
மனிதர்களாகிய நாம் உருவாவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானதுதான் பூச்சிகள். அந்தப் பூச்சிகளில் ஒன்றான தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அதனால் முதலில் நேரடியாகப் பாதிக்கப்படுவது மனிதர்களாகிய நாம்தான். எனவே தேனீ நட்புத் தோட்டங்களை உருவாக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள காடுகள் மரங்கள் தாவரங்கள் அடங்கிய பசுமைப் பரப்பை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்ளும் போதுதான் நீடித்த நிலையான வளர்ச்சி சாத்தியப்படும். அதற்கு தேனீக்கலொடு அணுக்கமாவோம்….


















