தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டி போராட்டம்: கொதிக்கும் அரசியல் கட்சிகள்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டி ஊர்வலப் போராட்டம் நடத்தப் போவதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

#image_title
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்பலியை தடுக்க கடந்த ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

#image_title
இதில் ஆளுநருக்கு இருந்த சந்தேகங்களுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த மசோதா 142 நாட்கள் கிடப்பில் இருந்ததில் 47 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆளுநர் இந்த மசோதாவை திருப்பி அனுப்பியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதேப்போன்று 20-க்கும் மேற்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.
எனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த எதேச்சதிகார் செயலை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக் கோரியும் வரும் 17-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.