தமிழ்நாடு
அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு… மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிரு: கனலை கக்கும் செல்லூர் ராஜூ!

அதிமுக-பாஜக இடையேயான வார்த்தை போரில் அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அப்செட்டாகி உள்ளனர். ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ போன்றவர்கள் ஏற்கனவே பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் பதிலடி கொடுத்த நிலையில் முன்னள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்கள் கட்சியிலிருந்து பாஜகவில் சேரும்போது இனித்தது. இப்பொழுது அங்கிருந்து இங்கு வரும் பொழுது கசக்கிறதா என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவிற்கு சகிப்புத்தன்மை வேண்டும். வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்புடன் பேசக்கூடாது. மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிருடன் பேசக்கூடாது. கூட்டணிக் கட்சிகளின் தோளில் உட்கார்ந்து கொண்டு காதைக் கடிப்பதை அதிமுக பொறுத்துக்கொண்டு இருக்காது. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு பாஜக தரம் தாழ்ந்துவிட்டது.
அண்ணாமலை வாய்க்கொழுப்போடு பேசுவதாகத் தெரிகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் காரணம். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு தகுதியே கிடையாது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. ஜெயலலிதாவைப் போல் யாரும் பிறக்கவும் இல்லை. இனி பிறக்கவும் முடியாது. ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாக முடியாது என்றார் அதிரடியாக. செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்கும் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.