வணிகம்
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது!

மத்திய பட்ஜெட் 2023-2024 இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
காலை 9:23 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 451.27 புள்ளிகள் அதிகரித்து 60,001.17 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 189.45 புள்ளிகள் அதிகரித்து 17,811.60 புள்ளிகளாக வர்த்தகமாகி இருந்தது.
ஆற்றல், எண்ணெய், நிதி, நுகர்வோர் விருப்பமான பொருட்கள் மற்றும் சேவைகள், அடிப்படை பொருட்கள் குறியீடுகளை தவிரப் பிற எல்லா துறைகளும் ஏறு முகத்துடன் வர்த்தகம் ஆகி வருகிறன.
பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அதில் வெளியாகும் அறிவிப்புகளைப் பொருத்து சந்தையில் இந்த நிலையில் பெரும் மாற்றம் நிகழும்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை 11 மணியளவில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் டேப்ளட் கணினியுடன் அவர் நாடாளுமன்றம் வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்ற நிதியாண்டு முதல் பேப்பர் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், பட்ஜெட் அறிக்கை டேப்ளட் கணினி மூலம் கொண்டு வரப்பட்டு வாசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் ஆன பிறகு லெதர் சூட்கேஸில் பட்ஜெட் அறிக்கை கொண்டு வந்து வாசிக்கும் முறை மாற்றப்பட்டு அது சிவப்பு நிற துணியால் ஆன பையாக மாற்றப்பட்டது.
இன்னும் சற்று நேரத்தில் மத்திய கேபினெட் அமைச்சர்கள் தலைமையிலான கூட்டம் கூடி பட்ஜெட் தக்கல் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து 11 மணியளவில் நாடாளுமன்றம் கூடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.