உலகம்
இன்னொரு மிகப்பெரிய வேலைநீக்க நடவடிக்கை.. 2600 பேர்களின் வேலை காலி..!

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் கிட்டத்தட்ட தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலைநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளன என்பதும் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் பெரிய ஐடி நிறுவனங்கள் வரை வேலை நீக்க நடவடிக்கைகள் எடுத்ததால் லட்சக்கணக்கானோர் கடந்த சில மாதங்களில் மட்டும் வேலை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 2600 ஊழியர்களை முன்னணி கெமிக்கல் நிறுவனம் ஒன்று வேலை நீக்க செய்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ரசாயன நிறுவனமான BASF SE என்ற நிறுவனம் உலக அளவில் 2600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை உறுதி செய்யப்பட்டால் உலகளாவிய பணியாளர்களில் இரண்டு சதவீத வேலை நீக்க நடவடிக்கை எடுப்பது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைநீக்க நடவடிக்கை மட்டுமின்றி செலவை குறைக்கும் முயற்சியில் ஒரு சில தொழிற்சாலைகள் உர வசதிகள் மற்றும் இரண்டு அமோனியம் ஆலைகளையும் மூட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக ஜெர்மனியில் உள்ள BASF SE ஆலையில் 700 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதன் அடுத்து உலகளாவிய கிளைகளில் 1900 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு காரணமாக இந்நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்றும் கடந்த பல ஆண்டுகளாக சிக்கலில் இருந்த இந்நிறுவனம் தற்போது வேறு வழியில்லாமல் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.