இந்தியா
மணமகன், மணமகள் இல்லாத ஒரு திருமணம்.. கலெக்டர் தலைமை நடத்தி வைத்த புதுமை..!

ஒரு திருமணம் என்றால் அந்த திருமணத்தில் யார் வந்தாலும் வராவிட்டாலும் மணமகன் மற்றும் மணமகள் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதும் இதுதான் காலம் காலமாக நடந்து வரும் திருமணம் என்பது தெரிந்ததே. தற்காலிக டெக்னாலஜி உலகில் விர்ச்சுவல் முறையில் திருமணம் நடந்தால் கூட அதில் கூட மணமகன் மணமகள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் மணமகள் மணமகள் இல்லாமல் ஒரு திருமணம் நடந்தது என்றும் அதற்கு அந்த மாவட்டத்தின் கலெக்டரே தலைமை தாங்கி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பழமையான கிணறு ஒன்றுக்கு தான் திருமணம் என்றும் அந்த கிணற்றுக்கும் ஒரு தோட்டத்திற்கும் திருமணம் செய்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை ஆட்சியர் மகேஷ் குமார் கைதல் என்பவர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் இந்த திருமணத்தில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது..
அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் கடந்த சில வருடங்களாக வறட்சியுடன் இருப்பதாகவும் அந்த கிணற்றில் தண்ணீர் வறண்டு போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது கெட்ட சகுனமாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த கிணற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என அந்த பகுதியை சேர்ந்த 85 வயது கிஷோரி தேவி என்பவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து கிணற்றுக்கும் அருகில் உள்ள தோட்டத்திற்கும் திருமணம் செய்து வைக்க கிராமத்தினர் முடிவு செய்தனர் பத்திரிகைகள் பிரமாண்டமாக அடிக்கப்பட்டது என்பதும் நிஜத் திருமணத்திற்கு நடத்தப்படுவது போன்ற அலங்காரங்கள் இசை நிகழ்ச்சிகள் அறுசுவை வகை சாப்பாடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.
துணை கலெக்டர் முன்னிலையில் மற்ற பிரபலங்கள் முன்னிலையில் இந்த திருமணத்தை கிஷோரி தேவி நடத்தி வைத்தார். பெண் வீட்டார் சார்பிலும் மாப்பிள்ளை வீட்டார் சார்பிலும் நடத்த வேண்டிய சடங்குகளும் நடத்தப்பட்டன. இந்த திருமணத்திற்கு பிறகு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது என்பதும் அனைவரும் திருப்தியுடன் சாப்பிட்டு விட்டு கிணற்றையும் தோட்டத்தையும் வாழ்த்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணம் காரணமாக இனி கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என்ற நம்பிக்கை அந்த கிராம மக்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கை உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.