இந்தியா
என் சாதனைகளை நானே முறியடித்து கொண்டிருக்கிறேன்: மருத்துவ கல்லூரிகளை திறந்துவைத்து பிரதமர் பேச்சு

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பேசிய போது எனது சாதனைகளை நானே முறியடித்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இன்று விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். காணொளி மூலம் திறந்து வைத்த இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிபிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள 11 மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியபோது மருத்துவ கல்லூரி திறப்பில் என்னுடைய சாதனைகளை நானே முறியடித்து கொண்டிருக்கிறேன் என்றும் ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் ஒன்பது மருத்து கல்லூரிகளை திறந்ததே தனது சாதனையாக இருந்தது என்றும் அந்த சாதனையை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தி உள்ளதாகவும் மத்திய அரசின் காப்பீடு திட்டம் மூலம் மருந்துகளுக்கு செலவு தொகை குறைந்துள்ளது என்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், தரமான மருத்துவம் மற்றும் குறைவான செலவில் சிகிச்சை என்ற இலக்கை நாம் சில ஆண்டுகளில் அடைவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தாய்மொழி கல்வியை தான் நமது அரசு ஊக்குவிக்கிறது என்றும் தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றும் தமிழ் சார்ந்த படிப்புகளில் செம்மொழித்தமிழ் மத்திய நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்று காணொளி மூலம் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்த பிரதமரிடம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















