இந்தியா
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: முன்பதிவு ஆரம்பம் என தகவல்

இந்தியாவின் பிரபல கார் வாடகை நிறுவனமான ஓலா தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிசினஸில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டர்கோ என்ற நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது
இந்த ஸ்கூட்டர் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அதிநவீன வசதிகளுடன் இருக்கும் என்றும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில்தான் தற்போது ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கான முன்பதிவு தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெறத் தக்க வகையிலான ரூபாய் 499 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது
ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெயரையோ விலையையோ இன்னும் அறிவிக்காத நிலையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஆரம்பம் என்று மட்டும் தகவல் வெளிவந்துள்ளது. மின்சார வாகன உற்பத்தியில் முதலிடம் வகிப்பதற்கான ஆற்றல் இந்தியாவில் உள்ளது என ஓலா நிறுவன தலைவர் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார்
மூன்று மாடல்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதை அடுத்து வாடிக்கையாளர்கள் எந்த அளவிற்கு இந்த ஸ்கூட்டருக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.








