உலகம்
அதிகமா டீ குடிப்பவரா நீங்கள்? நல்லா டீ செய்ய தெரியுமா? இந்த சர்வேயை பாருங்க !

லண்டன் : பிரிட்டனில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வே ஒன்றில் இங்கிலாந்தில் 2 சதவிகித மக்களுக்கு மட்டுமே சரியான முறையில் தேநீர் தயாரிக்க தெரிந்துள்ளதாக ஆச்சர்யம் கொடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் அதிகமாக தேநீர் குடிக்கும் மக்களை கொண்டுள்ள நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் டீக்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. குறிப்பாக மழை காலம் எல்லாம் வந்தால் போதும் அதிகம் டீ குடிக்காதவங்க கூட குடிக்க தொடங்கிவிடுவர். இந்தியாவின் பெரு நகரங்களில் பேச்சுலர் வாழ்க்கையை கழித்த பெரும்பாலானோருக்கு நிச்சயம் டீ பரிட்சயம் ஆகியிருக்கும். அந்த அளவிற்கு நம் மக்களுக்கு தேநீருடன் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆனால் எவ்வளவு தான் டீயை ரசிச்சு குடிக்க தொடங்கியிருந்தாலும், எத்தனை பேர் அதை மிக சரியாக போடுவர்? இந்தியாவை பொறுத்தளவில் என்னதான் சமைக்க தெரியாவிட்டாலும், குறைந்த பட்சம் பிளாக் டீயோ அல்லது பால் டீயோ போட தெரிந்திருக்கும். உலகத்தின் பெரும்பான்மையான நகரங்களில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளது. துருக்கி தான் உலகிலேயே அதிகப்படியான தேநீர் குடிக்கும் மக்களை கொண்டுள்ள நாடு. அங்கு சராசரியாக ஆண்டுக்கு ஒவ்வொரு நபரும் 6.96 lb அல்லது 3.16 கிலோ டீ குடிக்கின்றனர். அதே போல தான் பிரிட்டனிலும். அங்குள்ள மக்கள் சராசரியாக 4.28 lb அல்லது 1.94 கிலோ தேநீர் ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொள்வதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.
பிரிட்டிஷ் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தேநீர் தயாரிக்கும் விதம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் சமீபத்தில் அங்கு தேநீர் குடிப்பவர்கள் குறித்து எடுக்கப்பட்ட சர்வே ஒன்று ஆச்சர்யம் கொடுக்க கூடிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் 2000 பெரியவர்களிடம் டிக் வாட்ச் மேற்கொண்ட சர்வேயில் 2 சதவிகிதம் மக்கள் மட்டுமே தேநீரை சரியான வழிமுறையில் செய்யவது குறித்து தெரிந்து வைத்துள்ளனர்.
இங்கிலாந்தில் 50ல் ஒருவர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு தேநீர் காய்ச்சுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு சராசரியாக ஒரு நபர் டீபேக்கை வெறும் 1 நிமிடம் 10 வினாடிகளுக்கு கோப்பையில் விட்டுவிடுவார் என்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எந்த மாவட்டத்தில் சிறந்த மற்றும் மோசமான தேநீரை உருவாக்குகின்றனர் என்றும் சர்வேயில் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 நிமிடம், 26 விநாடிகள் தேநீர் தயாரிக்கும் நேரத்துடன் மான்செஸ்டர் முதலிடத்தில் உள்ளது. பர்மிங்காம் 58 வினாடிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. சரி இப்போது சொல்லுங்க நீங்க எவ்வளவு நேரத்தில் எப்படி டீ போடுவீங்க ?






















