இந்தியா
விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

நாடு முழுதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக உணவு, குடிநீர், காத்திருப்பு அறை, ஓய்வு அறை, மருத்துவ மையம், குளியல் அறைகள், கழிவறை, டீக்கடைகள், செல்போன் சார்ஜிங் வசதி, புத்தக கடைகள், ஏடிஎம் வசதி மற்றும் தாய்ப்பாலூட்டும் அறை என அணைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை ஈடுகட்டும் வகையில் “அம்ரித் பாரத்“ திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளின் தேவையை புர்த்தி செய்ய சலூன் வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.
தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் இந்த சலூன் கடைகள் நடத்தப்படும். ரயில் நிலைய வளாகத்தில் இடம் ஒதுக்கி 3 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும். சரியான முறையில் தரநிலைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ரயில்வே அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அல்லது ரயிலுக்காக காத்திருப்பவர்கள் தங்களை அழகுபடுத்தி கொள்வதன் மூலம் தங்கள் நேரத்தை திறம்பட பயன்படுத்திக் கொள்ள முடியும். வேலைக்கு செல்லும் முன் அல்லது திரும்பும் வழியிலேயே சலூன் சேவைகளை பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.
இதேபோல ரயில் நிலையங்களில் பணிபுரியம் ஊழியர்களும் இதை பயன்படுத்தலாம். ரயில் நிலையங்களில் இதுபோன்ற கூடுதல் வசதிகள் கிடைப்பதால் பயணிகள் அவசரத்திற்கு வெளியே செல்லாமல் உள்ளிருந்தே இந்த வசதிகளை பெற முடியம்.
ரயில்வே அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது –முதற்கட்டமாக இது பீகாரில் தொடங்கப்படும். இது வெற்றிகரமாக இருந்தால் அடுத்தபடியாக நாட்டின் பிற மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, எழும்புர், தாம்பரம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இவற்றின் மூலம் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு உள்ளுர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பம் சிறுதொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
எதிர்காலத்தில் பயணிகளின் பயணத்தை இன்னும் எளிதாகவும் சுவாரசியமாகவும் மாற்றுவதற்காக ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற மேலும் பல வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது “ என்றார்கள்.














