வணிகம்
8வது ஊதியக்குழு: ஜனவரி 2026 முதல் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (DR) உயருமா? முழு விளக்கம்!

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணம் (Dearness Relief – DR) தொடர்பாக, ஜனவரி 2026 முதல் என்ன மாற்றம் ஏற்படும் என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. குறிப்பாக 8வது ஊதியக்குழு (8th Pay Commission) அமலுக்கு வரவுள்ள நிலையில், ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரண உயர்வு தொடருமா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, ஆண்டுக்கு இருமுறை — ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் — அகவிலைப்படி (DA) மற்றும் அதனுடன் இணைந்த அகவிலை நிவாரணத்தை (DR) திருத்தி வருகிறது. பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க, ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் DA-வுடன் இணைந்தே கணக்கிடப்படுகிறது.
தற்போது, ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரண விகிதம் 58% ஆக உள்ளது. 7வது ஊதியக்குழுவின் பதவிக்காலம் 2025 டிசம்பர் 31 அன்று முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 2026-ல் அகவிலை நிவாரணம் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
7வது ஊதியக்குழு முடிந்த பிறகும் DR உயருமா?
முன்னாள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய நிபுணர்கள் தெரிவிப்பதன்படி, ஒரு ஊதியக்குழுவின் காலம் முடிந்த பிறகும், அடுத்த ஊதியக்குழு பரிந்துரைகள் அமலுக்கு வரும் வரை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு தொடரும். இதற்கு முந்தைய ஊதியக்குழுக்களின் காலகட்டங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
எனவே, 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் தொடர்ந்து உயர்த்தப்படும் வாய்ப்பு அதிகம்.
DR உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?
அகவிலை நிவாரண உயர்வு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அமலுக்கு வந்தாலும், பெரும்பாலும் அதற்கான அறிவிப்பு:
ஜனவரி உயர்வு → மார்ச் மாதம்
ஜூலை உயர்வு → செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம்
என்று அறிவிக்கப்படும்.
அகவிலை நிவாரணம் ஓய்வூதியத்தை எப்படி மாற்றுகிறது?
அகவிலை நிவாரணம், ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியத்தின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
உதாரணம்:
ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.25,000 எனவும், DR 58% எனவும் எடுத்துக்கொண்டால்:
👉 மொத்த ஓய்வூதியம் = ரூ.39,500
ஜனவரி 2026-ல் DR 2% உயர்ந்து 60% ஆக மாற்றப்பட்டால்:
👉 மொத்த ஓய்வூதியம் = ரூ.40,000 ஆக உயரும்.
8வது ஊதியக்குழு வரும்வரை எத்தனை முறை DR உயரும்?
8வது ஊதியக்குழு பரிந்துரைகள் 2027-ல் அமலுக்கு வந்தால், அதற்கு முன்:
ஜனவரி 2026
ஜூலை 2026
ஜனவரி 2027
ஜூலை 2027
என மொத்தம் 4 முறை அகவிலை நிவாரணம் உயர வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் எத்தனை பேர்?
நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி, தற்போது:
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் – 69 லட்சம்
மத்திய அரசு ஊழியர்கள் – 50.14 லட்சம்
8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியம் எவ்வளவு உயரலாம்?
7வது ஊதியக்குழுவில் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டது.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.0 என நிர்ணயிக்கப்பட்டால்:
குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் → ரூ.18,000
அதிகபட்ச அடிப்படை ஓய்வூதியம் → ரூ.2,50,000
என உயர வாய்ப்பு உள்ளது.







