செய்திகள்
பொங்கல் பரிசு: அரசின் போனஸ் அறிவிப்பு வெளியீடு!

பொங்கல் பரிசு: தமிழக அரசு உத்தரவு வெளியீடு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ம் தேதி, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்கள் ஆர்வமாகக் கடைகளில் குவிந்து புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர்.
அதிகாரபூர்வமாக, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மக்களுக்காக ரூ. 1000 சிறப்பு தொகையும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை ‘ஃபெஞ்ச்’ புயல் நிவாரணம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நிதிச் சிக்கல்களை கருத்தில் கொண்டு, பொங்கல் தொகுப்பில் இந்த சிறப்பு தொகை வழங்கப்படவில்லை.
அதே நேரத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் போனஸ் விவரங்கள்:
- சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ. 3,000 உச்சவரம்பில் போனஸ் வழங்கப்படும்.
- 2023-2024 நிதியாண்டில் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் முழுநேர/பகுதி நேரப் பணியாளர்களுக்கு ரூ. 1,000 சிறப்பு போனஸ் கிடைக்கும்.
- ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500 அளவில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
இந்த பொங்கல் போனஸிற்காக ரூ. 163 கோடியே 81 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






















