தமிழ்நாடு
தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம், வீடு வழங்கிய முதல்வர்!

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரன் சாய்ராம் என்பவர் கடந்த சில மாதங்களாக வறுமையில் வாடி இருந்தார் என்ற செய்தி வெளியானது. இது குறித்து அவருடைய பேட்டி ஒன்று நெஞ்சை உருக்கியது. புகைப்பட கலைஞரான சாய்ராம், வறுமையில் வாடிய நிலையில் புகைப்பட தொழில் எதுவும் கிடைக்காததால் செக்யூரிட்டி உள்பட ஒரு சில பணிகளை செய்து கொண்டிருந்ததாகவும், ஆனால் ஊரடங்கில் எந்த பணியும் கிடைக்காததால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு இப்படிப்பட்ட நிலையா? என்று பலர் வருத்தமுற்றனர். இந்த செய்தி தமிழக முதல்வரை எட்டிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ 5 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவித்தார். மேலும் அவருக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் வரவழைத்து அரசு சார்பில் குறைந்த வாடகையில் சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கியதற்கான ஆணையையும் வீட்டின் சாவியையும் கொடுத்தார். மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் நிதி உதவியாக வழங்கினார். இந்த நிகழ்வின்போது கலை பண்பாட்டு துறை ஆணையர் கலையரசி ஐ.ஏ.எஸ் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

















