தமிழ்நாடு
பாஜகவின் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடிக்கு எதிரான கோஷங்கள்: மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆளும் திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய சம்பவமும், இதனால் அப்செட்டான பாஜகவின் கரு.நாகராஜன் பேசிக்கொண்டிருந்தவரின் மைக்கை பிடுங்கிய சம்பவமும் நடந்துள்ளது.

#image_title
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அண்ணாமலை மீது பொய்வழக்கு போடுவதாக கூறி ஆளும் திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய பாஜகவினர் பலரும் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தனர். அப்போது பேசிய மத்திய சென்னை மாவட்டத்தலைவர் விஜய் ஆனந்த், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி பாஜக தான். எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டே இல்லை எங்களுக்கு. திறனற்ற எடப்பாடி, ஆளுமையற்ற எடப்பாடி என பேச ஆரம்பித்தார். அப்போது அருகில் நின்ற பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் கடுப்பாகி அவரிடம் இருந்த மைக்கை தட்டிப்பறித்தார்.
கரு.நாகராஜன் மைக்கை பறித்ததை மேடையில் நின்றிருந்த குஷ்பு உள்ளிட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியில் பார்த்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கரு.நாகராஜன், குஷ்பு, கராத்தே தியாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.