கிரிக்கெட்
INDvENG – 3வது டெஸ்ட் ரிசல்ட்டை சிம்பிளாக கலாய்த்த ஜோ ரூட்- இப்படி சொல்லிப்புட்டாரே!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவுக்கு வந்துள்ளது பல கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசியுள்ளார்.
3வது போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 145 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இங்கிலாந்து அணி, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்று முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘இரு அணிகளுமே மூன்றாவது டெஸ்டுக்காக பயன்படுத்தப்பட்ட விக்கெட்டில் திணறினோம். இதைப் போன்ற ஆட்டத்தை வைத்து எங்களது திறமையை மதிப்பிட முடியாது. இந்தப் போட்டியில் எனக்கே 5 விக்கெட்டுகள் கிடைத்தன. அதை வைத்துப் பார்த்தாலே இந்த பிட்ச் எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பது.
இன்னும் ஒரு போட்டி மட்டுமே இருக்கும் நிலையில், மூன்றாவது டெஸ்டை மனதில் வைத்து அதை அணுக மாட்டோம். அந்தப் போட்டியில் இந்தியாவைப் போல எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியும்’ என்று கூறியுள்ளார் ஜோ ரூட்.

இங்கிலாந்து அணி வீரர்களும், அந்த அணி நிர்வாகமும் நரேந்திர மோடி மைதான பிட்ச் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் பிட்ச் மாற்றப்பட வேண்டும் என்பது குறித்து அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.



















