வணிகம்
திவால் நிலையில் வோடாபோன் ஐடியா.. 33% பங்குகளை வாங்கும் மத்திய அரசு..!

வோடாபோன் ஐடியா திவாலாவதைத் தடுக்க அதன் பங்குகளை இந்திய அரசு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
ஒரு நேரத்தில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக இருந்த வோடாபோன், ஜியோ வருகைக்குப் பிறகு பெரும் சரிவைச் சந்தித்தது.
தொடர்ந்து தன்னை போலவே ஜியோவில் அலையில் சிக்கித் தவித்து வந்த ஐடியாவுடன் இணைந்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இப்போது போராடி வருகிறது.
ஆனாலும் வோடாபோன் நிறுவனம் வாங்கிய ஸ்பெக்டர்களுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், ஹட்ச் நிறுவனத்தைக் கைப்பற்றிய போது செலுத்த வேண்டிய வரி பாக்கி என பல்வேறு சிக்கல்கள் வோடாபோனை சூழ்ந்த நிலையில் அவற்றிலிருந்து மீள முடியாமல் உள்ளது.
தங்களது பிரதான போட்டி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் இரண்டும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு 5ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிலையில், இன்னும் ஒரு நகரத்தில் கூட வோடாபோன் ஐடியாவால் 5ஜி சேவையை வழங்க முடியவில்லை.
இப்படியே சென்றால் அரசுக்கு வரும் பணமும் கிடைக்காது, நிறுவனமும் திவாலாகிவிடும் சூழல் ஏற்பட்டதால், தங்களது வோடாபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைக்கு அதன் பங்குகளை வாங்கிக்கொள்ள அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அரசின் இந்த முடிவால் வோடாபோன் நிறுவனத்தின் 33 சதவீத பங்குகள் அரசுக்குக் கிடைக்கும். மேலும் வோடாபோன் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ள நிறுவனமாகவும் அரசு உருவெடுக்கும்.
இது பெரும் நிதி நெருக்கடியில் உள்ள வோடாபோன் ஐடியாவுக்கு பெரும் உதவியாகவும் இருக்கும். ஏற்கனவே அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்கும் போது, அதனை 4ஜி, 5ஜி சேவை வழங்க அனுமதிக்காமல் இப்படி திவாலாக உள்ள நிறுவனத்தின் பங்குகளை ஏன் அரசு வாங்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.