தமிழ்நாடு
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்திய நிலையில் தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அணுமதிக்கப்பட்டிருந்தது.
1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து 1.01.2022 முதல் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.