தமிழ்நாடு
அமித் ஷா சென்னை வருகை: எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று காலை சென்னை வர உள்ளநிலையில் நேற்று இரவே தமிழக முதல்வரும் அதிமுக தலைமையுமான எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன.
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பலமுறை சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிப்பு இன்னமும் வெளியாகமல் உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னைக்கு வரும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இந்த கூட்டணி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா இன்று சென்னைக்கு வர உள்ள நிலையில் நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்களை தனது இல்லத்துக்கு வரச் சொல்லி அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார். பாஜகவுடனான கூட்டணி பற்றி இறுதி ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இன்று சென்னைக்கு வரும் அமித்ஷா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மற்ற கட்சித் தலைவர்களையும் சந்திப்பார் என்று தெரிகிறது. இதனையடுத்து இன்று மாலையே அவர் சென்னையில் இருந்து புறப்படுகிறார்.



















