வணிகம்
முதல்முறையாக மாறுகிறது விக்கிபீடியா இணையதள பக்கம்!

ஏதாவது ஒரு முக்கிய தகவலை தேட வேண்டும் என்றால் உடனே நாம் கூகுளை அணுகுவோம், அதுபோல் ஒரு முக்கிய பிரபலத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக விக்கிபீடியா செல்வதுதான் நாம் அனைவருக்கும் உண்டான வழக்கமாக உள்ளது என்பது தெரிந்ததே.
இலவசமாக அனைத்து தகவல்களையும் தொகுத்து வழங்கி வரும் விக்கிபீடியா இணையதளம் பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருக்கும் நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அதில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றங்களுக்கு ஏற்ப இணையதளங்களின் முகப்புகளும் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விக்கிப்பீடியாவின் டெஸ்க்டாப் இணையதளம் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய மாற்றத்தின் படி மொழிகளை மாற்றுவதற்கான அம்சம் இப்போது வலது பக்கத்தில் இருக்கும் என்றும் புகைப்படங்கள் மற்றும் உரை இரண்டையும் தேட விரும்பும் வகையில் இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் முந்தைய செயல்பாடுகளை அகற்றப்படவில்லை என்றும் விக்கிபீடியா அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.
விக்கிபீடியாவில் உள்ள தன்னார்வ ஆசிரியர்கள் தங்களது பகுப்பாய்வு மற்றும் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் சில மேம்பாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் விக்கிபீடியாவின் 22 ஆவது பிறந்தநாளுக்கு பிறகு விக்கிப்பீடியாவின் புதுப்பிப்புகள் விரைவில் மேம்படுத்தப்பட உள்ளன என்றும் விக்கிபீடியா இணையதளம் அறிவித்துள்ளது.
பார்வையாளர்களின் தேவைகளை மேலும் பூர்த்தி செய்யும் வகையில் விக்கிபீடியாவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விக்கிபீடியாவை புதுப்பிக்கும் ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
விக்கிபீடியாவில் ஒவ்வொரு மாதமும் பில்லியன்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகை தரும் நிலையில் அதிலுள்ள கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களால் பல்வேறு ஆதாரங்களை பயன்படுத்தி எழுதப்படுகின்றன. இந்த நிலையில் விக்கிபீடியா இணையதளத்தின் புதுப்பிப்பு மிகவும் அவசியம் என்று கருதுவதாகவும் உலக மக்களின் அறிவை மேலும் எளிதாக்க நாங்கள் உதவுகிறோம் என்றும் விக்கிப்பீடியா தெரிவித்துள்ளது.
பூமியில் உள்ள எந்த ஒரு பிரபலத்தின் தகவல் தேவை என்றாலும் விக்கிபீடியாவில் அறியலாம் என்றும் இலவசமாக அதே நேரத்தில் உறுதியான தகவல்களை தருவதற்கு நாங்கள் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் என்றும் விக்கிப்பீடியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.






















