தொழில்நுட்பம்
திடீரென முடங்கிய ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ்: அதிர்ச்சியில் கூகுள் பயனர்கள்..!

கூகுள் நிறுவனத்தின் சேவைகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் உள்ளிட்ட செயலிகள் திடீரென முடங்கியதை அடுத்து கூகுள் பயனளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகின் நம்பர் ஒன் தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் யூடியூப் ,கூகுள் டிரைவ், அனாலிடிக்ஸ் ஆகியவையும் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் உள்ளிட்ட சேவைகள் இந்தியாவில் உள்ள பல பயனர்கள் அணுக முடியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை 11.22 மணி முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூகுளின் ஜிமெயில் உள்பட பல சேவைகள் முடங்கியது என்றும் பயனாளர்களுக்கும் இந்த சிக்கல் இருந்ததாகவும் பயனர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் பல சேவைகள் முடங்கியதாகவும் இது குறித்து ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னால் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கிய நிலையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சேவைகளும் தொழில்நுட்ப காரணங்களால் முடங்கி உள்ளது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் போட்டி போட்டு வருகிறது என்பதும் ஒரு பக்கம் மைக்ரோசாப்ட் ChatGPT
என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகம் செய்த நிலையில் கூகுள் அதேபோன்று Chatbot என்ற செயலியை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பா அமெரிக்காவில் இதன் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் கூகுள் Chatbot முக்கிய சோதனை காரணமாகத்தான் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.